ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தில் விடுதலை செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் ஷிரான் ராசிக் தற்போது கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே, இனி பல விடயங்கள் வெளிவரும் எனத் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(18) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்,
“வழக்குகளை விரைவாக விசாரித்து நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படும்போது, நாமல் ராஜபக்ச, ராஜபக்சக்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் கலக்கமடைவது ஆச்சரியத்துக்குரியதல்ல. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏன் கலக்கமடைய வேண்டும்?
எதிர்க்கட்சித் தலைவர் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளைக் கேட்கின்றார். அவரது ஆலோசனைகளைப் பெற்றால், சஜித் பிரேமதாச தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராகவே இருக்க நேரிடும்.
நாமல் ராஜபக்ச, ‘நாங்கள் யார் என்று தெரியும் தானே, பின்கதவால் ஓடுபவர்கள் அல்ல’ என்று சபையில் சண்டித்தனம் பேசுகின்றார். ராஜபக்சக்கள் யார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். தாஜூதீன் படுகொலை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை என எண்ணற்ற படுகொலைகளுக்கும் இவர்களுக்கும் தொடர்புண்டு.
ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தில் விடுதலை செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர் ஷிரான் ராசிக் தற்போது கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இனி பல விடயங்கள் வெளிவரும்” என்றார்.