மதுரை
அதிமுகவை அபகரிக்க முயற்சித்தால் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள் எதையும் செய்யத் துணிவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் விஜய்க்கு விடுத்துள்ள எச்சரிக்கை அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“அதிகார துஷ்பிரயோகம் செய்யும் தவெக”:
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆளும் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “பழைய அரசியல் கட்சிகளுக்கு மாற்று மற்றும் ‘Gen Z’ தலைமுறையினரின் அரசியல் என்ற முழக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதால்தான் தவெகவால் இரண்டாவது ஆண்டிலேயே வெற்றி பெற முடிந்தது. ஆனால், தற்போது அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கில், எங்களது முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைத் தொடர்ந்து தவெகவில் இணைத்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து இந்தச் செயலில் ஈடுபட்டு வருகிறார்,” என்று குற்றம் சாட்டினார்.
“தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது?”:
தொடர்ந்து பேசிய அவர், “தேர்தலுக்கு முன் தவெக அளித்த மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500, 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித்தொகை, ரூ.3,000 முதியோர் ஓய்வூதியம், மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட எந்தவொரு பிரதான வாக்குறுதியையும் முதலமைச்சர் விஜய் இதுவரை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையிலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடன் மட்டுமே வாங்கி வருகிறது,” என்று சுட்டிக்காட்டினார்.
“டிஜிட்டல் பிம்பமும் பகிரங்க எச்சரிக்கையும்”:
“சமூக வலைதளங்களில் டிஜிட்டல் குழு, இன்ஃப்ளுயன்சர்கள் (Influencers) மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களைப் பயன்படுத்தி முதலமைச்சர் விஜய் தனக்கான ஒரு அரசியல் பிம்பத்தை மட்டுமே உருவாக்கி உள்ளார். அதிமுகவை அபகரிக்க முயற்சித்தால், கட்சியின் உரிமையை மீட்க விசுவாசத் தொண்டர்களாகிய நாங்கள் எதையும் செய்யத் தயங்க மாட்டோம். அதிமுகவைக் குறிவைப்பதை விட்டுவிட்டு, வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில் வளர்ச்சி, காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் மேகதாது உள்ளிட்ட உண்மையான மக்கள் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் உடனடியாகத் தீர்வு காண வேண்டும்,” என்று ஆர்.பி. உதயகுமார் ஆவேசமாகத் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய்யை அச்சுறுத்தும் வகையில் ஆர்.பி. உதயகுமார் விடுத்துள்ள இந்தப் பகிரங்க மிரட்டல் வீடியோ தற்போது பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் மாபெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
#RBUdhayakumar #AIADMK #ChiefMinisterVijay #JosephVijay #ThalapathyVijay #TVKGovernment #TNPolitics #TamilNaduNews #Madurai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates