கடந்த வார இறுதியில் டவுன்டவுன் ஹமில்டனில் உள்ள பூல் ஹால் (Pool hall) ஒன்றிற்கு வெளியே கத்திக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் புதுப்பித்தல்களைக் கொலைக் குற்றப் பிரிவு துப்பறியவாளர்கள் புதன்கிழமை வழங்கவுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, 21 வயதான செனின் ரூசல், பரடைஸ் வீதி தெற்கிற்கு (Paradise Road South) அருகில் உள்ள கிங் வீதி மேற்கில் அமைந்திருக்கும் ‘கிங் ஸ்ட்ரீட் பில்லியர்ட் அண்ட் ஸ்போர்ட்ஸ் பாரில்’ (King Street Billiard and Sports Bar) அதிகாலை 2:30 மணியளவில் பார் மூடப்பட்ட பின்னர் ஏற்பட்ட தகராறில் ஈடுபட்டுள்ளார்.
காயமடைந்த பாதிக்கப்பட்ட நபரை பிரைட் வீதிக்கு (Frid Street) அருகில் உள்ள மெயின் வீதியில் ஒரு டாக்சி ஓட்டுநர் கண்டெடுத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக் குத்துக் காயங்களுக்கு உள்ளான ரூசல் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதைப் பொலிஸார் தெரிவிக்கவில்லை.
காலை 11:30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் இக்கொலை விசாரணை தொடர்பான மேலதிக விவரங்களை புலனாய்வாளர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.