சென்னை
மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறையைக் கைவிடக் கோரியும் தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
“தென் மாநிலங்களுக்குப் பெரும் பாதிப்பு!” – முதலமைச்சர் எச்சரிக்கை:
சட்டப்பேரவையில் தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், “தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படியே தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த ஏப்ரல் 2026-ல் நாடாளுமன்றத்தில் 50 ஆண்டு காலத் தொகுதி மறுவரையறைத் தடையை நீக்கவும், எம்.பி.க்களின் எண்ணிக்கையை 550-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா தோல்வியடைந்தது.
தற்போது மீண்டும் அந்த மசோதாவைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு 1971-க்குப் பிறகு உள்ள எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மறுவரையறை செய்தாலும், மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை,” என்று எச்சரித்தார்.
மத்திய அரசை வலியுறுத்தி 3 முக்கியத் தீர்மானங்கள்:
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ள எந்தவொரு மாநிலமும் தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது மத்திய அரசின் தலையாய கடமையாகும் என முழங்கிய முதலமைச்சர் விஜய், மத்திய அரசை வலியுறுத்தி 3 முக்கியத் தீர்மானங்களை முன்மொழிந்தார்:
-
543 எம்.பி.க்கள் நிரந்தரம்: நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும்.
-
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்: தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை, மாநிலங்களுக்கிடையேயான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தில் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
-
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: வரவிருக்கும் 2029 மக்களவைப் பொதுத் தேர்தலிலும், அதன் பிறகு வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் 33 சதவீத (மூன்றில் ஒரு பங்கு) தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை எவ்விதக் காலதாமதமுமின்றி உறுதி செய்ய வேண்டும்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த இந்த அரசினர் தனித்தீர்மானங்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
#ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #Delimitation #TNAssembly #LokSabha #WomensReservationBill #TamilNaduNews #Chennai #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates