நீர்கொழும்பு குடாபாடு கடற்பகுதியில் திங்கட்கிழமை (11) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகுதியை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் கெளனி நிறுவனத்தினால் நீர்கொழும்பு குடாபாடுவ கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான 14 பைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, குறித்த பைகளுக்குள் அடைக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் இந்நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கையினால் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட சுமார் ஐந்நூற்று முப்பத்தைந்து (535) கிலோகிராம் பீடி இலைத் தொகுதி இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.