சென்னை
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதத்தின் போது, கன்னிப்பேச்சு பேசிய சூலூர் தவெக எம்.எல்.ஏ. சுகுமாருக்கு, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கண்ணியத்துடன் பேசுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஸ்டாலினை விமர்சித்த தவெக எம்.எல்.ஏ:
சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தின்போது, சூலூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. சுகுமார் தனது கன்னிப்பேச்சை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மனதில் உண்மையிலேயே இருந்திருந்தால், மீண்டும் சட்டசபைக்குள் வந்திருப்பார்” என்று விமர்சித்தார்.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி:
சுகுமாரின் இந்தப் பேச்சின் போது உடனடியாகக் குறுக்கிட்ட திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “தற்போதைய தவெக எம்.எல்.ஏ., கடந்த ஆட்சியில் எங்களின் அமைச்சர் ஐ.பெரியசாமியுடன் சுற்றிக் கொண்டிருந்தவர். தமிழகத்தில் உள்ள 1.31 கோடி பெண்களின் மனதில் மு.க.ஸ்டாலின் இன்றும் குடியிருக்கிறார்” எனத் தக்க பதிலடி கொடுத்தார்.
எ.வ.வேலுவின் முக்கியக் கோரிக்கை:
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, “முன்பெல்லாம் சட்டப்பேரவையில் கண்ணியத்திற்கு எதிராகப் பேசப்படும் வார்த்தைகள், சபாநாயகர் அறைக்குச் சென்ற பின்பாக ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு நீக்கப்படும். ஆனால், தற்போது பேரவை நிகழ்வுகள் எல்லாமே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், சபாநாயகர் அவ்வப்போதே ஆலோசித்துக் கண்ணியத்திற்கு எதிராகப் பேசப்படும் வார்த்தைகளை உடனடியாக நீக்க வேண்டும்” என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
சபாநாயகரின் அதிரடி அறிவுரை:
இந்த விவாதங்களைத் தொடர்ந்து, தவெக எம்.எல்.ஏ. சுகுமாரை நோக்கிப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “பேசும்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் மிகப்பெரிய திராவிட பின்புலம் கொண்ட பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். அந்த கண்ணியத்தையும் கவுரவத்தையும் காப்பாற்றும் வகையில் நீங்கள் தொடர்ந்து அவையில் பேச வேண்டும்” என ஆணித்தரமாக அறிவுறுத்தினார்.
#TNAssembly #TVKMLA #Sukumar #SpeakerJCDPrabhakar #MKStalin #MRKPanneerselvam #EVVelu #DMK #TVKGovernment #TNPolitics #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates