சென்னை
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்ட திமுக நிர்வாகி அரசகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், மத்திய குற்றப்பிரிவு விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலி அமைப்பின் மூலம் ரூ.100 கோடி மோசடி:
சென்னை சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்த திமுக செய்தித் தொடர்பு குழு துணைத் தலைவர் பி.டி. அரசகுமார், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்வு, DTCP/CMDA உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழ்நாட்டின் பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் குவிந்தது – குண்டாஸ் பாய்ந்தது:
பணத்தைப் பெற்றுக்கொண்டு எந்தவித அரசு அனுமதியையும் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமலும் சுமார் ரூ. 100 கோடி வரை மோசடி செய்ததாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவில் 160-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசகுமாரை கடந்த ஜூன் 27-ஆம் தேதி அதிரடியாகக் கைது செய்தனர். தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
61 வங்கிக்கணக்குகள் முடக்கம் – இரு உறவினர்கள் கைது:
விசாரணையில், போரூரில் உள்ள திருமண மண்டபம் மற்றும் வடபழனியில் உள்ள விடுதிகளில் பள்ளி நிர்வாகிகளை வரவழைத்துப் பணத்தைப் பறித்தது கண்டறியப்பட்டது. இதுவரை 120-க்கும் மேற்பட்ட பள்ளிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் ரூ.14 கோடிக்கும் மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அரசகுமாருக்குச் சொந்தமான 61 வங்கிக்கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், இந்த பணப் பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர்களான மதுரையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்ற ராஜா (39) மற்றும் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் (49) ஆகியோரைப் தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மேற்கு மாவட்டங்கள் குறிவைப்பு – தொடரும் தீவிர விசாரணை:
இந்த மோசடியில் குறிப்பாகச் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளையே அதிகளவில் குறிவைத்து அரசகுமார் கும்பல் பணம் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ரூ.17 கோடி வசூலிக்கப்பட்டதற்கான கூடுதல் ஆதாரங்களும் கிடைத்துள்ளதால், மோசடிப் பணம் யார் யாருக்கெல்லாம் சென்றுள்ளது? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்புள்ளதா? என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
#PrivateSchoolScam #PTArasakumar #ChennaiCrimeBranch #GoondasAct #DMK #SchoolRecognitionFraud #TamilNaduNews #Chennai #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates