புத்தாண்டு அழகுராணிப் போட்டி ஒன்றின் போது மலைப்பாம்புடன் நடனமாடி சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தைப் பெற்ற இளம் பெண் ஒருவருக்குக் கொழும்பு பிரதிநீதிவான் நீதிமன்றம் 50,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட ஊர்வனமான அந்த மலைப்பாம்பைப் பணத்திற்காக அவருக்கு வாடகைக்கு வழங்கியதாகக் கூறப்படும் நபருக்கும் 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இந்த நடனத்தின் காணொளிகள் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, பெல்லன்விலையிலுள்ள விலங்குவளப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட வனவிலங்கு அலுவலகத்தால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையை அடுத்து இந்த வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் அந்தப் பெண்ணையும் மலைப்பாம்பை வழங்கிய நபரையும் கைது செய்தனர்.
கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு சந்தேகநபர்களும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.
பாதுகாக்கப்பட்ட வனவிலங்கை வைத்திருந்து நடனம் ஆடியதற்காக அந்தப் பெண்ணுக்கு நீதிமன்றம் 50,000 ரூபா அபராதம் விதித்தது. தாவர மற்றும் விலங்கினப் பாதுகாப்புச் கட்டளைச் சட்டத்தை மீறி, பாதுகாக்கப்பட்ட வனவிலங்கைச் சட்டவிரோதமாக வைத்திருந்தது மற்றும் அதனை வாடகைக்கு வழங்கியதற்காக ஆண் சந்தேகநபருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை வைத்திருத்தல், கொண்டு செல்லுதல், காட்சிப்படுத்துதல், விற்பனை செய்தல் அல்லது வாடகைக்கு வழங்குதல் ஆகியவை தாவர மற்றும் விலங்கினப் பாதுகாப்புச் கட்டளைச் சட்டத்தின் மூலம் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி எம்.டி.பி. சஜீவவின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு மாவட்ட வனவிலங்கு அலுவலகத்தினரால் இந்த விசாரணைகளும் வழக்குகளும் முன்னெடுக்கப்பட்டன.