சென்னை:
மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் பெண்கள் குறித்துத் தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை என்றும், இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும். துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் விமர்சித்துள்ளார். அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு அவசரமாகக் கைது செய்ய வேண்டிய தேவை இல்லை என்றும், நண்பகல் 12 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும், நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் கூடக் காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும்தான் என அன்புமணி சாடியுள்ளார். தமிழ்நாட்டில் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ள நிலையில், அவற்றைத் தீர்ப்பதில்தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர, இதுபோன்ற செயல்களில் அல்ல என்றும், இனியாவது ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
#AnbumaniRamadoss #UdhayanidhiStalin #PMK #DMK #TVKGovt #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #PoliticalUpdate #TamilNewsLive