திண்டுக்கல்:
எங்களுக்கு வழங்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பூசல் நிலவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றன. தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த வாக்கெடுப்பில் வேலுமணி தரப்பில் 25 எம்.எல்.ஏ-க்களும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 22 எம்.எல்.ஏ-க்களும் பங்கேற்றனர். பின்னர் சமாதானம் ஏற்பட்டு, கடந்த ஜூன் 25 அன்று எஸ்பி வேலுமணியைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அதிமுக கொடிகள் மற்றும் தலைவர்களின் படங்கள் ஏதுமின்றித் தனது ஆதரவாளர்களுடன் எஸ்பி வேலுமணி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், “என்னை நம்பி 30 மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்காமல் எனக்கு மட்டும் பதவி கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, வீரமணி போன்ற மூத்த தலைவர்களைப் புறக்கணித்துவிட்டுத் எனக்கு மட்டும் பதவி தருவது அநீதியானது. எனவே துணைப் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கப்போவதில்லை” எனத் தெரிவித்தார். மேலும், அதிமுகவை திமுகவுடன் இணைப்பது அல்லது கூட்டணி வைப்பது போன்ற பேச்சுக்கள் எழுந்ததாலேயே உள்கட்சிப் பூசல் வெடித்ததாகவும், திமுகவைத் தொடர்ந்து எதிர்ப்பேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பின், முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், “எங்களுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்த்து அதிமுகவைப் பலப்படுத்த வேண்டும்” என அதிரடியாகக் கோரிக்கை விடுத்தனர். இதனால் அதிமுக உட்கட்சி அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#SPVelumani #AIADMK #EPS #CVShanmugam #NathamViswanathan #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #Sasikala #TTVDhinakaran #PoliticalUpdate #TamilNewsLive