கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக வட்டா (Vatta) வாகனம், தாழவட்டுவான் சந்தியை நெருங்கியபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த ‘அபிவிருத்தி லொத்தர்’ விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதித் தலைகீழாகப் புரண்டுள்ளது. இதனால் விற்பனை நிலையத்தின் தூண்கள் பலத்த சேதமடைந்ததுடன், கடை முழுமையாகத் தரைமட்டமானது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த வாகனச் சாரதியும், லொத்தர் கடை உரிமையாளரும் உடனடியாக மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்குச் சிகிச்சை பலனின்றி வாகனச் சாரதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்த கமகே சுனில் சாந்த (63 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதேவேளை, படுகாயமடைந்து வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருபவர் லொத்தர் விற்பனை நிலையத்தின் உரிமையாளரான மூர்த்திதம்பி வேணு தாஸ் (56 வயது) எனப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.