சென்னை:
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளியான தகவல்களை அவரது தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக அறியப்பட்டவர். எடப்பாடி பழனிசாமியுடனான கருத்து வேறுபாட்டால் அதிமுகவிலிருந்து விலகிய ஓபிஎஸ், தனது பரம எதிரியான திமுகவில் இணைந்தது அரசியல் ரீதியாகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதிலும், திமுக தலைமை தனக்கு உரிய முக்கியத்துவத்தையும், அங்கீகாரத்தையும் வழங்கவில்லை என்ற கடும் அதிருப்தி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு இருக்கும் சமூகச் செல்வாக்கை உணர்ந்த ஆளும் தவெக அரசு, தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அவரைத் தன் பக்கம் இழுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது.
தவெகவில் அவரை இணைக்கும் முயற்சியில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அதனை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக அவர் களமிறங்குவார் என்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் காட்டுத்தீயாகப் பரவி வந்தன. இந்நிலையில், இந்தத் தகவலை ஓபிஎஸ் தரப்பு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் ஆதாரமில்லாமல் பரப்பப்படும் தவறான செய்தி எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
#OPS #TVK #CmVijay #TamilNaduPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #Bodinayakanur #DMK #PoliticalRumors #TamilNewsLive