விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்த பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பட்டாசு தயாரிக்க அமைக்கப்பட்டிருந்த தகர செட்டுகள் முழுவதும் வெடித்து தரைமட்டமானது. தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உரிமையாளர் ராம் பிரகாஷ், இன்னாசி முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் ஐயப்பராஜா, பாண்டித்துரை ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மொத்தம் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன்(39) என்பவர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 5 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது எப்படி என்றும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எங்கு சென்றார்கள் என்றும் அப்பகுதி மக்களும், தொழிற்சங்கத்தினரும் கடும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SivakasiBlast #FireworksAccident #Virudhunagar #TamilNadu #IllegalGodown #CauveryIssue #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #VijayGovernment #SafetyViolation #SivakasiNews #PoliticalNews #TamilNewsLive