அரசாங்கம் மாகாண சபை தேர்தலை ஒரு வருடகாலத்துக்குள் நடத்துவதாக வாக்களித்துள்ளபோதும் தற்போது பாராளுமன்ற குழு அமைத்து, அதனை திட்டமிட்டு பிற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் இந்த பாராளுமன்றக் குழுவில் நாங்கள் தொடர்ந்து இருப்பதா என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் அதிகார பரவலாக்கத்தை மேற்கொள்ளத் தவறியமையே கறுப்பு ஜூலை கலவரத்துக்கு காரணமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அனுரகுமார திஸநாயக்க, ஜனாதிபதி தேர்தலுக்காக முன்வைத்த கொள்கை பிரகடனத்தில் தெரிவித்த வாக்குறுதிகளை அடிப்படையாகக்கொண்டே மக்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அந்த கொள்கை பிரகடனத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்போவதாக தெரிவித்த விடயங்களில் முக்கியமாக, புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகும் நிலையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அன்று அதிகார பரவலாக்கம் மேற்கொள்ளத் தவறியமையே ஜூலை கலவரத்துக்கு காரணமாக அமைந்தது. அதனால் நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோம். அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதான அம்சம்தான் அரசியலமைப்பு திருத்தம். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கம் இன்னும் செய்யத் தவறியிருக்கிறது.
அதேபோன்று திகதி குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை ஒரு வருடகாலத்துக்குள் நடத்துவதாக அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நடத்தினார்களா? ஆனால் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு நாங்கள் தெரிவிக்கும்போது, பாராளுமன்ற குழு அமைத்து, மாகாண சபை தேர்தலை தொடர்ந்து காலம் கடத்தி வருகிறது. தேர்தலை நடத்தாமல் இருக்கும் நோக்கில் திட்டமிட்டு இதனை இழுத்தடிப்பு செய்து வருகிறது. அதனால் இந்த பாராளுமன்ற குழுவில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறதா என்ற திீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதேபோன்று வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்வதாக கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை இதுதொடர்பில் எந்தவொரு விசாரணை ஆணைக்குழுவும் அமைக்கப்படவில்லை. இனங்களுக்கிடையில் மோதல்களை தவிர்ப்பதற்கு அனைத்து மத குழுவொன்றை அமைப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.