கனடிய பொருட்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 50% புதிய இறக்குமதி வரியை அறிவித்துள்ள நிலையில், அதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என ஒன்டாரியோ மாகாண முதலமைச்சர் (Premier) டக் ஃபோர்ட் (Doug Ford) கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்தால், கனடா “வரிக்கு வரி, டொலருக்கு டொலர்” என்ற ரீதியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறிய ஃபோர்ட், ஒன்டாரியோவின் தொழிலாளர்கள், வணிகங்கள் மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், LCBO மதுபானக் கடைகளின் அலமாரிகளிலிருந்து அமெரிக்க மதுபானங்களை அகற்றுவதற்கான மாகாணத்தின் முடிவை நியாயப்படுத்திய அவர், “ஒன்டாரியோவைப் பாதுகாக்கத் தான் செய்யும் போராட்டத்தை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை” என்றும் கூறினார்.
வரும் ஓகஸ்ட் 19 முதல் அமலுக்கு வரவுள்ள அமெரிக்காவின் புதிய வரிகள், மதுபானம், பால் பொருட்கள், ப்ளைவுட் (plywood), ஹாக்கி உபகரணங்கள், சிமெண்ட் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீது விதிக்கப்படவுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.