டொராண்டோவில் நபர் ஒருவருக்குக் கடுமையான உடல் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு டொராண்டோ காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
காவல்துறையின் தகவல்படி, இந்தச் சம்பவம் ஜூன் 27 அன்று அதிகாலை 4:15 மணியளவில் டான்ஃபோர்த் அவென்யூ (Danforth Avenue) மற்றும் பிராட்வியூ அவென்யூ (Broadview Avenue) சந்திப்பிற்கு அருகில் நிகழ்ந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட நபரும் சந்தேக நபரும் வீதி உலாவு வண்டிக்காக (streetcar) காத்திருந்துள்ளனர்.
அப்போது, சந்தேக நபர் அங்கிருந்த ஒரு செங்கல்லை எடுத்து பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கியதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னர், அவர்கள் இருவரும் அதே வீதி உலாவு வண்டியில் ஏறியதுடன், அங்கேயும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டதுடன், இது குறித்து காவல்துறையிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபரின் அடையாளம்:
-
வயது: 30 முதல் 40 வயதிற்குள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
தோற்றம்: சுமார் 5 அடி 9 அங்குலம் உயரம், 165 முதல் 175 பவுண்டுகள் எடை, மெலிந்த உடலமைப்பு மற்றும் பழுப்பு நிற முகரோமம் (தாடி/மீசை).
-
அணிந்திருந்த ஆடைகள்: தலையில் சுற்றப்பட்ட வெள்ளை நிறச் சட்டை, கறுப்பு நிற ‘அண்டர் ஆர்மர்’ (Under Armour) டி-சர்ட், சாம்பல் நிறக் கோடுகள் கொண்ட கறுப்பு நிற ‘அடிடாஸ்’ (Adidas) ஜொகிங் பேண்ட் மற்றும் வெள்ளை நிற ‘நைக் ஏர் ஃபோர்ஸ் 1’ (Nike Air Force 1) காலணிகள்.
சந்தேக நபரின் புகைப்படங்களை டொராண்டோ காவல்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், டொராண்டோ காவல்துறையை 416-808-5500 என்ற எண்ணிலோ அல்லது ‘கிரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பை 416-222-TIPS (8477) என்ற எண்ணிலோ ரகசியமாகத் தொடர்புகொண்டு அறியவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை சந்தேக நபர் நிரபராதியாகவே கருதப்படுவார்