2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா நடத்திய புலனாய்வு விசாரணைகளின் ஆவணங்களை, இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதா என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அறிக்கை ஒன்றின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது.
அத்தோடு, தாக்குதல்கள் நடந்த உடனடியாகவே, உள்ளூர் புலனாய்வுப் பிரிவினரிடம் போதிய நிபுணத்துவம் இல்லாத காரணத்தினால், அமெரிக்க அரசாங்கத்தின் ஊடாக முழுமையான விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்திருந்ததையும் அக்கட்சி நினைவு கூர்ந்துள்ளது. அத்துடன், 2019 ஏப்ரல் 22 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலின் போதும் ரணில் விக்ரமசிங்க இவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுச் சேவை (SIS) உள்ளிட்ட இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) அமைப்பு விரிவான விசாரணையை மேற்கொண்டது. இதன் இறுதி அறிக்கை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இரு வருட கால புலனாய்வு விசாரணைகளை அடுத்து, 2020 நவம்பர் 12 அன்று கலிபோர்னியாவின் மத்திய மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், எஃப்.பி.ஐ இன் விசேட முகவர் மெரிலி ஆர். காட்வின் (Merrilee R. Godwin) 71 பக்கங்கள் கொண்ட வாக்குமூலப் பத்திரிகையைத் (Affidavit) தாக்கல் செய்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இலங்கையில் ஏற்கனவே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, 2020 டிசம்பர் 11 அன்று லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கொன்றும் தொடரப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கூற்றுப்படி, அமெரிக்க விசாரணையின் அனைத்து ஆவணப் பொருட்களும் தற்போதும் எஃப்.பி.ஐ மற்றும் அமெரிக்க நீதித் திணைக்களத்தின் வசமே உள்ளன.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் குறித்த தனது விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ள சூழலில், இந்த ஆவணங்களை அமெரிக்காவிடம் இருந்து உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளதா என்றும், அவ்வாறு கோரவில்லை எனில் அதற்கான காரணம் என்ன என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையின் நீதித்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆவணங்கள் அனைத்தும் அவசரமாகக் கிடைக்கப் பெற வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது