பிரித்தானியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரினி அமரசூரிய, லண்டனில் வாழும் இலங்கை வம்சாவளியினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அதேவேளையில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் வெற்றியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் அரசியல் கலாசாரம் ஒரு நேர்மறையான மற்றும் மாற்றியமைக்க முடியாத மறுசீரமைப்பிற்கு உட்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ள பிரதமர், இது நாட்டின் நல்லாட்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லண்டனில் வாழும் இலங்கையர்களுடன் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே பிரதமர் இந்த விபரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு வார இறுதி நாள் அல்லாத சாதாரண வேலைநாளில் (Weekday) இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், பெருமளவிலான இலங்கையர்கள் இதில் கலந்துகொண்டதாக பிரதமரின் உத்தியோகபூர்வ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் சந்திப்பின் போது அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடிய பிரதமர் அமரசூரிய, சவால்களை முறியடிப்பதில் ஒற்றுமை மற்றும் நெகிழ்ச்சித் தன்மையின் (Resilience) முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், நாட்டின் முன்னேற்றத்தைத் தொடர்ந்தும் தக்கவைப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தினார்.
இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா பால்ராஜ், நாட்டில் தற்போது அனைத்து சமூகங்களும் சமமாக நடத்தப்படும் ஒரு ஆட்சி முறை நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் அனைத்துப் பிரஜைகளுக்கும் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.