செப்டெம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கான எவ்வித கோரிக்கையையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) அரசாங்கம் முன்வைக்காது என மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மின்சக்தி அமைச்சர் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளார்.
அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்வடைந்து வருகின்றமை மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியினால் எரிசக்தி செலவீனங்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து எழுந்துள்ள கவலைகளுக்குப் பதிலளித்த அமைச்சர் கருணாதிலக, அண்மைய மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் நேரடித் தாக்கமானது பிரதானமாக 180 மின் அலகுகளுக்கு (Units) மேல் பயன்படுத்தும் நுகர்வோரையே பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.
ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த மின் நுகர்வோரின் மீதான சுமையைத் தணிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் பெறுமதியான மானியத்தை (Subsidy) வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் மீண்டும் ஒரு மின்சாரக் கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை அணுகும் எவ்வித திட்டமும் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சர் நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.