சென்னை:
“இலங்கையில் கொடூர யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும், இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை சர்வதேச அரங்கில் நீதி கிடைக்கவில்லை; தயவுசெய்து தமிழ் இனத்தை நிம்மதியாக வாழ விடுங்கள்” என்று பிரபல மூத்த நடிகர் நிழல்கள் ரவி கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசியுள்ளார்.
நாளை மே 18-ஆம் தேதி, உலகத் தமிழர்களால் ‘முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு நாள்’ மற்றும் ‘ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக’ அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2009 மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தியாகங்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்நாள் துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சூழலில், நடிகர் நிழல்கள் ரவி ஈழத்தமிழர்களுக்காகத் தனது ஆதங்கக் குரலை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள உருக்கமான செய்தியில், “சிங்கள அரசின் அடக்குமுறையை எதிர்த்துத் தமிழ் இனம் தனது உரிமைக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்திப் போராடியது. கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் கூட்டுப் பங்களிப்புடன் அந்தப் போராட்டம் மௌனிக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் லட்சக்கணக்கான தமிழ் உயிர்கள் கொடூரமாகப் பலியாகின; அடுக்கடுக்கான போர்க் குற்றங்கள் அரங்கேறின. ஆனால் 17 வருடங்கள் கடந்தும் இதுவரை அதற்கான நீதி கிடைக்கவில்லை. எனது தொப்புள்கொடி உறவுகள் தங்களின் உயிர்களையும், உடைமைகளையும் இழந்து இன்றும் நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் விதைக்கப்பட்ட எமது தொப்புள்கொடி உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட எமது இனத்திற்கு விடிவு கிடைத்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் போதுதான் அந்த ஆன்மாக்கள் சாந்தியடையும். ஈழத்தமிழ் உறவுகளுக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்; என்றும் ஈழத்தமிழர்களின் நிழலாக இந்த நிழல்கள் ரவி இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
#NizhalgalRavi #MullivaikkalRemembrance #May18 #EezhamTamils #TamilGenocide #JusticeForTamils #BreakingNews #MullivaikkalGenocide #LankanWarCrimes #GlobalTamils #EezhamVoice #TamilNaduSupports #EmotionalSpeech #HumanRights #NeverForgetMullivaikkal #17YearsOfInjustice #TamilNews #ThalapathyVijay #TVK_Government #CM_Vijay_Official_“`