சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அரசுக்குக் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி சில முக்கிய அரசியல் அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசியல் வரலாற்றில் தவெக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 1967-க்குப் பிறகு 60 ஆண்டுகாலமாக நிலவி வந்த திமுக – அதிமுக இருமுனை அரசியலுக்கும், ஒற்றைக்கட்சி ஆட்சி முறைக்கும் மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே நிதர்சனம் என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடிக்க இரு திராவிடக் கட்சிகளும் திரைமறைவில் கூட்டணி அமைக்க முயன்றது தற்போது அம்பலமாகியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தவெக அரசுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்துப் பேசிய அவர், “ஆளுநர் மாளிகை விழாவில் பாடப்பட்ட வந்தே மாதரம் பாடலுக்காகவும், ரதன் பண்டிட் என்பவரை அரசியல் உதவியாளராக நியமித்ததற்காகவும் புதிய அரசு தேவையின்றி விமர்சிக்கப்பட்டது. ஆட்சி அமைந்த அடுத்த நாளே மகளிர் உரிமைத்தொகைக்காக அழுத்தம் கொடுத்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய பலரும் மரபுகளை மீறிப் பேசினர். வெளியில் இருந்து ஆதரவு தரும் சில கட்சிகள், அளவிற்கு மீறி அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றன. ஊசலாட்டம் கொண்டவர்கள் மற்றும் ஊழல் கறை படிந்தவர்களின் ஆதரவு முன்னே இனிக்கும்; பின்னே கசக்கும். விஜய்யின் அரசை ‘பலவீனமான அரசு’ என உலகிற்குக் காட்டச் சிலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்; அதற்கு முதலமைச்சர் விஜய் எவ்விதத்திலும் வாய்ப்பளித்துவிடக் கூடாது” என டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்தியுள்ளார்.
#DrKrishnasamy #VijayAsCM #TVK_Government #BreakingNews #May16 #TamilNaduPolitics #PuthiyaTamilagam #AllianceGovernment #PoliticalWarning #ThalapathyVijay #NewGovernmentTN #CorruptionFreeTN #TNAssembly #ConfidenceVote #RathanPandit #MagalirUrimaiThogai #DMK_ADMK_Failure #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`