சிறுவர் இணையவழிபாலியல் சுரண்டல் தொடர்பாக கியூபெக் (Quebec) மாகாணம் முழுவதும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, இளம் வயதுடைய நான்கு சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கியூபெக் மாகாணக் காவல்துறையினரால் (Sûreté du Québec – SQ) 4 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 26 முதல் 73 வயதுக்கு இடைப்பட்ட 23 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“கைது செய்யப்பட்ட அனைவரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்தமை, விநியோகித்தமை மற்றும் அவற்றை அணுகியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
160க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்பு
இந்த விசேட போலீஸ் நடவடிக்கையில் 160க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கெடுத்திருந்தனர்.
“சுமார் 25 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, பகுப்பாய்விற்காகப் பல கணினி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையின் போது, 4 மில்லியனுக்கும் குறையாத சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று SQ விளக்கியுள்ளது.
மே 11 முதல் 14 வரை இந்த அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன. இது கியூபெக் மாகாணக் காவல் (SQ), மொன்றியால் காவல் (SPVM), கியூபெக் சிட்டி காவல் (SPVQ), லாவல் காவல் (SPL), லோங்குயில் காவல் (SPAL) மற்றும் காட்டினோ காவல் ஆகிய துறைகளின் கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது.
மைனர்கள் (சிறுவர்கள்) மீதான ஆன்லைன் பாலியல் சுரண்டல் தொடர்பான எந்தவொரு சம்பவங்கள் குறித்தும் கனடாவின் தேசிய தகவல் மையத்திற்கு (National tip line) புகாரளிக்குமாறு கியூபெக் மாகாணக் காவல் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.