நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்த மண்டலம் காரணமாக, கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படக்கூடும் என்பதால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து மீனவர்களும் உயிராபத்து காப்பு அங்கிகளை (Life Jackets) அணிவது கட்டாயமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வானிலை அவதானிப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 25-35 கிலோமீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திரு. கஹவத்த குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாகப் புத்தளம் மற்றும் சிலாபத்திலிருந்து காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.