விசாரணை ஒன்றில் ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில், அந்த நபரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, “எனது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், என்னிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட வேண்டாமா? அது பெறப்பட வேண்டும். ஒரு விசாரணையின் போது ஒருவரது பெயர் குறிப்பிடப்பட்டால், அவரிடம் வாக்குமூலம் பெறுவது சாதாரணமான விடயம்,” என்று கூறினார்.
இலங்கையில் இத்தகைய நடவடிக்கைகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு கலாசாரம் இருந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த மனநிலையை மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“முதலாவதாக, நாம் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, நாம் சட்டத்திற்குப் பயப்பட வேண்டும். ஜனாதிபதியாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கிராம உத்தியோகத்தராக இருந்தாலும் சரி, அனைவரும் சட்டத்திற்கு அஞ்ச வேண்டும். சட்டத்திற்கு அப்பாற்பட்ட எவரும் இருக்க முடியாது. அதிகாரம் அல்லது கௌரவமான பதவிகளில் இருப்பது இதற்குக் தடையாக இருக்க முடியாது. நமது நாட்டை ஒரு புதிய பாதையில் இட்டுச் செல்வதற்கு இது அவசியமானது,” என்று அவர் கூறினார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சமூகத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, சட்ட ஏற்பாடுகள் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தப்படாது என்றும் உறுதியளித்தார்.
“அரசு அதிகாரிகளின் கடமைகளுக்குத் தடையாக சட்டம் பயன்படுத்தப்படாது. சட்டம் ஒருபோதும் அநீதியான முறையிலோ அல்லது பழிவாங்கும் நோக்கிலோ பயன்படுத்தப்படாது,” என்று அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.