யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என்று வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார். அத்தகைய முறையற்ற செய்திகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர் கூறியதாவது:
கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையில் நடந்த அனர்த்தம் (தீ விபத்து) தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இரண்டு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன:
முதலாவது குழு வைத்தியசாலைக்கு வெளியே உள்ள அதிகாரிகளை கொண்டு அமைக்கப்பட்டு, அனர்த்தம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இரண்டாவது குழு வைத்தியசாலை மட்டத்தில் அமைக்கப்பட்டு, தீயில் இருந்து மீட்கப்பட்ட மருந்துகளின் இருப்பை எடுக்கும் பணியை மேற்கொள்கிறது. தீயில் எரிந்த மருந்துகளின் மதிப்பு மற்றும் களஞ்சியசாலைக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
அனர்த்தம் நடந்த இடம் யாழ்ப்பாணம் பொலிஸாரின் பொறுப்பில் உள்ளது. தடயவியல் விசாரணைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை கொழும்பிலிருந்து வருகை தந்த அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளில் இணைந்துள்ளனர்.
விசாரணைகள் முடிவடைந்ததும் அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் சமர்ப்பிக்கப்படும் என்றும், நிரந்தர மருந்து களஞ்சியசாலையை நவீன வசதிகளுடன் அமைத்துத் தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.
தற்போது வைத்தியசாலையில் சேவைகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன. ஆனால் மருத்துவ சேவைகளில் குறைபாடு உள்ளதாகவும் மருந்துகள் இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் வைத்தியசாலை மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். எனவே மக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.