சென்னை:
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வரும் வேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்தைக் காக்க, விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக முன்னிறுத்துவதே சரியான முடிவாக இருக்கும் என அவர் திராவிடக் கட்சிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது அறிக்கையில் சிந்தனை செல்வன், “நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வியத்தகு அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. இது மக்களின் உணர்வு அல்ல, வாக்குப்பதிவு இயந்திரங்களில் அரங்கேற்றப்பட்ட நுட்பமான மோசடி எனப் பலரும் கருதுகின்றனர். குறிப்பாகக் குளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்திருப்பதை ஏற்க முடியாது. இத்தகைய ஆபத்தான சூழலில், ரசிக மனோநிலையும் பாசிசச் சதியும் சேர்ந்து உருவாக்கியுள்ள சிக்கலிலிருந்து நாட்டை மீட்க, அப்பழுக்கற்ற அனுபவம் வாய்ந்த தலைவர் திருமாவை முதலமைச்சர் ஆக்குவதே சரியாக இருக்கும். சமூக நீதி மண் என்று மார்தட்டிக்கொள்பவர்கள், தமிழகத்தைக் காப்பாற்ற இப்படி ஒரு முடிவை எடுப்பது காலத்தின் கட்டாயம். இரு துருவ திராவிடக் கட்சிகளுக்கும் இடையே இதுதான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்து அல்ல, மக்களின் தாகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தவெக-விற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், சிந்தனை செல்வனின் இந்த ‘திருமா முதல்வர்’ முழக்கம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Thirumavalavan #SinthanaiSelvan #VCK #ChiefMinisterThirumavalavan #BreakingNews #May7 #TamilNaduPolitics #SocialJustice #DMK #ADMK #TVK #Vijay #ThalapathyVijay #MKStalin #ElectionResults2026 #PoliticalTwist #NewEraTN #EVMControversy #DalitLeadership #VijayMakkalIyakkam_“`