யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் (JMA) இன்று (2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை) “Green Jaffna Project” எனும் பாரிய மரநடுகைத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தச் செயற்றிட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளான ஆடியபாதம் வீதி,
பொற்பதி வீதி என்பன பசுமையாக்கப்படவுள்ளன:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் வைத்தியர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடப் பீடாதிபதி, யாழ்ப்பாண மருத்துவச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வைத்திய நிபுணர்கள், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் செயலாளர் , யாழ். மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டனர்:
நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் குறைக்கவும், பசுமைப் போர்வையை விரிவுபடுத்தவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் மரநடுகையோடு நின்றுவிடாமல், நடப்பட்ட மரங்களை முறையாகப் பராமரிப்பதற்கான பொறுப்புகளும் சம்பந்தப்பட்ட அமைப்புகளினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.