மொண்ட்ரியாலில் உள்ள ஒரு பேக்கரியில் (Boulangerie), “அனைத்தும் இலவசம்” என்று கூச்சலிட்டவாறு புகுந்த முகமூடி அணிந்த கும்பல், சுமார் 1,000 டாலர் மதிப்பிலான பேக்கரி பொருட்களைத் திருடிச் சென்றுள்ளது.
பட்டப்பகலில் கடைக்குள் நுழைந்த ஒரு குழுவினர், அலமாரிகளில் இருந்த பொருட்களைப் பைகளில் நிரப்பிக்கொண்டு, பணம் செலுத்தாமல் வெளியேறிய இந்தச் செயலால் மொண்ட்ரியால் பேக்கரி நிர்வாகம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. “மனிதர்களால் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்,” என ‘மாமி கிளாஃபுட்டிஸ்’ (Mamie Clafoutis) பேக்கரியின் இணை உரிமையாளர் ஜோசப் சபாட்டியர் தெரிவித்தார்.
செயின்ட் டெனிஸ் வீதியில் (Saint Denis Street) அமைந்துள்ள இந்தக் கடையின் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் அந்த நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.
“தலைக்கவசம் அணிந்த சுமார் 10 பேர் திட்டமிட்டு உள்ளே நுழைந்து, தங்கள் பைகளை நிரப்பிக்கொண்டு, ‘அனைத்தும் இலவசம்’ என்று கூச்சலிட்டனர். தாங்கள் முதலாளித்துவத்திற்கு எதிரானவர்கள் (anti-capitalists) என்று கூறிக்கொண்ட அவர்கள், கடையின் ஜன்னல்களையும் சேதப்படுத்தினர்,” என்று அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்தவர்கள் “அனைத்தும் இலவசம்” என்றும் “அராஜகம் வாழ்க” (Vive l’anarchie!) என்றும் முழக்கமிட்டுள்ளனர். மேலும், கடையின் ஜன்னலில் “இலவச ரொட்டி” என்றும், கடைக்குள் “முதலாளித்துவக் கடை” என்றும் எழுதிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டு ஒரு அரசியல் நடவடிக்கை என்று இணையதளம் வாயிலாக ஒரு பெயர் தெரியாத குழு பொறுப்பேற்றுள்ளது. முதலாளித்துவத்தையும், கண்காணிப்புத் தொழில்நுட்பங்களையும் எதிர்ப்பதாக அந்தக் குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மொண்ட்ரியால் காவல்துறையின் (SPVM) செய்தித் தொடர்பாளர் ஜீன்-பியர் பிராபண்ட் கூறுகையில், காலை 8:30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து அழைப்பு வந்ததாகவும், இதில் வன்முறை எதுவும் நடக்கவில்லை என்றாலும் அதிகப்படியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
ஏப்ரல் 30-ஆம் தேதியும் ரோஸ்மாண்ட் பகுதியில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதாகவும், இரண்டுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது.
“இதைச் சமூகச் செயல்பாடு என்று அழைக்காதீர்கள்; இது திருட்டு,” என்று பேக்கரி நிர்வாகம் சாடியுள்ளது. “அதிகாலை 4 மணிக்கு எழுந்து வேலை செய்யும் பேக்கரித் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களைப் பாதிக்கும் செயல் இது” என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.