சர்ச்சைக்குரிய ஏயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடமிருந்து (CIABOC) எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை என அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சட்டத்தரணி மனோஜ் கமகே, இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முறையான தொடர்பாடல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தற்போதைய ஜனாதிபதியின் அண்மைக்கால கருத்துக்கள் நீதித்துறை முடிவுகளை முன்கூட்டியே தீர்மானிப்பதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்துவது போல் தோன்றுவதாகக் குறிப்பிட்ட அந்த அறிக்கை, தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நிலக்கரி மோசடி, கொள்கலன் விடுவிப்பு மற்றும் டொலர் மோசடி உள்ளிட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க ஆணைக்குழு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவானது எந்தவொரு அரசியல் நிர்வாகத்தினதும் நிதியைக் கொண்டு இயங்கவில்லை, அது பொதுமக்களின் நிதியிலேயே இயங்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய கமகே, பாரிய அளவிலான ஊழல் வழக்குகள் குறித்து ஆணைக்குழு சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளால் ராஜபக்ச தரப்பினர் அச்சமடையப் போவதில்லை எனவும், தேவைப்பட்டால் சட்ட ரீதியாக இதற்குப் பதிலடி கொடுப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.