சிறைத்தண்டனை முடிந்து அண்மையில் விடுதலையாகியுள்ள, வன்முறைச் செயல்களில் ஈடுபடக்கூடிய “அதிக ஆபத்துள்ள” நபர் குறித்து ரொறன்ரோ பகுதி மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்திய தாக்குதல், அமைதி காக்கும் அதிகாரிக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமை ஆகிய குற்றங்களுக்காக நான்கு ஆண்டுகள், நான்கு மாதங்கள் மற்றும் 22 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவித்த 49 வயதுடைய வில்லியம் சார்லஸ் கிப்சன் (William Charles Gibson) கடந்த வெள்ளிக்கிழமை விடுதலையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“திரு. கிப்சன் மீண்டும் வன்முறையில் ஈடுபடக்கூடிய அதிக ஆபத்துள்ள நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விடுதலையான பிறகு, எவ்வித நன்னடத்தை கண்காணிப்பு அல்லது இதர மேற்பார்வை உத்தரவுகளுக்கும் உட்பட்டிருக்க மாட்டார்,” என்று பொலிஸார் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
கிப்சன் சமூகத்திற்கு “நிரூபிக்கப்பட்ட ஆபத்தை” விளைவிக்கக்கூடியவர் என்றும், அவர் ரொறன்ரோ பகுதியில் எங்காவது இருக்கலாம் என்றும் விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.
இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் 416-808-7474 என்ற எண்ணில் பொலிஸாரையோ அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.