போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம்
ஏப்ரல் 30, 2026 – வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த தேரர்கள், தங்களது மூத்த தேரர் (குரு ஹாமதுருவோ), பிரதேச பௌத்த தலைவர் மற்றும் தத்தமது நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களிடம் இருந்து பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகேதர திஸாநாயக்க இது குறித்துத் தெரிவிக்கையில், இந்தச் சட்டம் முன்னரே இயற்றப்பட்டிருந்தாலும், அண்மைக்காலமாக அது சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மகாசங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பின் பின்னர், இனிவரும் காலங்களில் இந்த நடைமுறை அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இது குறித்து மகாநாயக்க தேரர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பிய 22 இலங்கை பௌத்த தேரர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பாரியளவிலான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட அண்மைய சம்பவத்தை அடுத்து, அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
சட்டத் திருத்தங்கள்: இதற்கிடையில், பௌத்த விகாரைகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தில் (Buddhist Temporalities Ordinance) அவசரத் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக, சட்டமா அதிபர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் நேற்று (29) விரிவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்படி, குறித்த கட்டளைச் சட்டத்தின் 41 மற்றும் 42 ஆம் பிரிவுகளுக்கு இணங்க, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான குழுவிற்கு வழங்குவது குறித்தும் மேலதிக ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.