நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியைக் காட்டித் தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) யாழ். பிராந்திய அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளனர்.
பெரியவிளான் காணிப் பிணக்கின் போது இடம்பெற்ற இந்தச் சம்பவம், தற்போது மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணையாகவும் உருவெடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்து மற்றைய தரப்பினரை நோக்கி நீட்டி, அவர்களைக் கொல்லப் போவதாக மிரட்டியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருச்சுனா இராமநாதன் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இளைஞன் ஒருவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மற்றும் அவரோடு முரண்பட்ட தரப்பைச் சேர்ந்த பெண் ஆகிய இருவரும், மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் நாளை (2026 ஏப்ரல் 29, புதன்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாளை மீண்டும் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள இந்த புதிய முறைப்பாடு வழக்கின் போக்கை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது