எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற நிதி பற்றிய குழு கூடவுள்ளதாகவும், அங்கு ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து கட்சி பேதமின்றி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அக்குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அங்கு எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையில், நிதி அமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சின் கணினி கட்டமைப்பு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை எவ்வகையிலும் நம்ப முடியாது எனவும், அவ்வாறு நடந்திருந்தால் அது பாரியதொரு பிரச்சினை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற நிதி பற்றியக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா ஊடகங்களிடம் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தொழில்நுட்ப ரீதியான தவறு ஏதேனும் நடந்துள்ளதா என்பதே அடிப்படைப் பிரச்சினையாக இருந்தது. அப்போது அவர் எங்களிடம் கூறியது என்னவென்றால், அரசாங்கம் பணம் செலுத்தத் தயாராக இருந்தும் தொழில்நுட்பக் காரணத்தினால் அதைச் செய்ய முடியாமல் போனதால், அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறினார்.
ஆனால் தற்போது இது குறித்த புதிய தகவல்கள் வெளிவரும்போது, இது பற்றி ஜனவரி மாதத்திலேயே பாராளுமன்றத்திற்கு அறிவித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
செயலாளர் சமர்ப்பித்த கடிதத்தில் ஒரு விடயத்தைக் கூறுகிறார். அதாவது அனுமதி இன்றி நிதி அமைச்சின் கணினி கட்டமைப்பிற்குள் ஹெக்கர்கள் ஊடுருவியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு நடந்திருக்கும் என நான் நம்பவில்லை. அப்படி நடந்திருந்தால் அது மிகப்பெரிய பிரச்சினையல்லவா? ஹெக்கர்கள் நிதி அமைச்சின் கட்டமைப்பை ஹெக் செய்திருப்பதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன்.
99% அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்றே நான் நம்புகிறேன். இங்கு நடந்திருப்பது வேறு ஏதோ ஒரு விடயம்.
நம்பிக்கை சார்ந்துதான் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, குழுவின் உறுப்பினர்கள் அரசியல் ரீதியாகச் சிந்திக்காமல், பாராளுமன்ற உறுப்பினர்களாக அந்தப் பொறுப்பை ஏற்று, முடிந்தவரை விரைவில் திறைசேரி செயலாளர் உள்ளிட்ட அனைவரையும் நிதிக் குழுவிற்கு அழைத்து, தேவையான தகவல்களைக் கேட்டறிந்து தெளிவுபடுத்துவோம் என்று எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.