மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு வழக்கில் உயர் நீதிமன்றம் முதல் முறையாக தமிழில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உயர் நீதிமன்றத்தின் முதலாவது தமிழ் உத்தரவாகும்.
கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோயில் குடமுழுக்குகளில் சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களும் ஓத வேண்டும் என நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையைப் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் செப்.17-ல் நடைபெறும் குடமுழுக்கு உட்பட அனைத்துக் கோயில்களில் நடைபெறவிருக்கும் குடமுழுக்குகளில் யாகசாலை, கருவறை மற்றும் கோபுர விமானங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களுடன் தமிழ் மந்திரங்களும் ஓத வேண்டும் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவில் நீதிபதி பரத சக்கரவர்த்தி நேற்று பிறப்பித்த உத்தரவு: வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் சம்ஸ்கிருத மந்திரங்களுடன் தமிழ் மந்திரங்களும் ஓதப்பட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பல வழக்குகளில் உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில், மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தமிழ் மந்திரங்கள் ஓதுவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.