ஹாமில்டனில் உள்ள மருந்து விற்பனை நிலையம் (Dispensary) ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், $210,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சட்டவிரோத நாய் இனப்பெருக்க மையமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாமில்டனின் ‘கிங் ஸ்ட்ரீட் ஈஸ்ட்’ (421 King St. East) பகுதியில் அமைந்துள்ள ‘4 வின்ட்ஸ் மெடிசின் லாட்ஜ்’ (4 Winds Medicine Lodge) என்ற வணிக நிறுவனம், கஞ்சா மற்றும் பிற தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, கடந்த மார்ச் மாதம் ஹாமில்டன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளைத் தொடங்கினர்.
குறித்த நிறுவனம் ஒரு பாடசாலை, பகல்நேர பராமரிப்பு மையம் (Daycare), தங்குமிடம் மற்றும் பல தேவாலயங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
ஏப்ரல் 16 அன்று அந்த வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சந்தை மதிப்பில் சுமார் $210,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் உள்ளடங்குவன:
-
109 கிலோகிராம் கொக்கைன்
-
146 கிராம் மெத்தாம்பேட்டமைன் (Methamphetamine)
-
1,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத மருந்து மாத்திரைகள்
-
இரண்டு கொள்கலன் GHB போதைப்பொருள்
மேலும், ‘கிராக் கொக்கைன்’ (Crack Cocaine) தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இரண்டு ஆய்வுக்கூடங்களையும், எட்டு நாய்க்குட்டிகள் மற்றும் இரண்டு வளர்ந்த நாய்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்த விலங்குகள் சட்டவிரோத இனப்பெருக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றின் நலனை உறுதி செய்வதற்காக ஹாமில்டன் மிருகங்கள் நலச் சேவையகம் (Hamilton Animal Services) அவற்றைப்பொறுப்பேற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஹாமில்டனைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் மற்றும் 24 வயதுடைய பெண் ஒருவரும், நோர்த் யோர்க்கைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் குற்றச்செயல்கள் மூலம் ஈட்டிய பணத்தை வைத்திருத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.