நாட்டில் அண்மைக்காலமாக பதிவாகி வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அவற்றைத் தடுப்பதற்கான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் டாக்டர் நாமல் சுதர்ஷன நேற்று (19), பெண்களை வலுப்படுத்துவதற்காக தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் ஊடாக கொள்கைகளை வலுப்படுத்துவதில் அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்ட விதிகளிலும் கொள்கைகளிலும் இடைவெளிகள் காணப்படுவதாகவும், அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அவசர கவனம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சினுடன் இணைந்து தமது அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
நீதி அமைச்சு தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தை மீளாய்வு செய்து வருவதாகவும், அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் ஓட்டைகளை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கி வருவதாகவும் அவர் விளக்கினார்.
கடந்த சில நாட்களில் ராகம, மொரகஹஹேன மற்றும் கொகரல்ல ஆகிய பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவங்களில் சிலவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு அந்தந்த நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி எப்.யு. வூட்லர் (F.U. Wootler) தெரிவித்தார்.