தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் நாட்டுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் 25 பில்லியன் ரூபாய் நஷ்டத்திற்குப் பொறுப்பான முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என்றும், அவர்கள் பதவி விலகிய பின் தப்பிச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் மின்சார நுகர்வோர் சங்கம் (ECA) தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மின்சார நுகர்வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க, அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் பதவி விலகியமையானது நாட்டுக்கு ஏற்பட்ட 25 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை மூடிமறைக்கும் ஒரு முயற்சியாகவே தெரிவதாகக் கூறினார். இது ஒரு நிர்வாகச் சிக்கல் அல்ல, மாறாக பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்திய பாரிய நிதி மோசடி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அவர்களது பதவி விலகலே பொறுப்பில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு முயற்சியாகும். இந்த மோசடியை மூடிமறைத்ததற்காக ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். எதிர்க்கட்சிகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் மிக விரைவாகச் செயல்படும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும், குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் (CID), இந்த விவகாரத்தில் ஏன் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது,” என அவர் தெரிவித்தார்.
ஜயகொடி மற்றும் பேராசிரியர் ஹேமபால உட்பட இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் காவலில் எடுத்து தாமதமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தம்மிக்க மேலும் வலியுறுத்தினார். மேலும், அரசுக்கு ஏற்பட்ட முழு நிதி நஷ்டத்தையும் அதற்குப் பொறுப்பானவர்களிடமிருந்தே மீளப் பெற வேண்டும் என்றும், மின்சாரக் கட்டண உயர்வு போன்ற வழிகளில் அதனைப் பொதுமக்கள் மீது சுமத்தக் கூடாது என்றும் அவர் கூறினார்.
மின்சாரத் துறையில் நிலக்கரி கொள்வனவு மற்றும் அது தொடர்பான முடிவுகள் குறித்து எழுந்த சர்ச்சைகள், பொதுமக்களின் அவதானத்தையும் விமர்சனத்தையும் ஈர்த்திருந்த நிலையில், எரிசக்தி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் சமீபத்தில் தமது பதவிக் கடிதங்களைச் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.