வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக அரசாங்கம் தனது வெளிப்படையான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.
வெடுக்குநாறி மலை பௌத்தர்களுக்கு உரியது என புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்திருந்தார். இருப்பினும், அமைச்சரவையில் உள்ள மற்றொரு அமைச்சரான சந்திரசேகர் இதனை மறுத்துள்ளார்.
“வெடுக்குநாறி மலையை இந்த அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றதா இல்லையா என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும். அரசியல் லாபத்திற்காக மக்களை ஏமாற்றும் கருத்துக்களைக் கூறக்கூடாது,” என சிறீதரன் சாடியுள்ளார்.
குருந்தூர் மலையிலும் நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக விகாரை கட்டப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அமைச்சர்கள் கூறும் இனவாதக் கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்றார்.