நயினாதீவிற்கு பிரதான மின் இணைப்பு கொண்டு செல்லும் முயற்சி பலனளிக்காமையால் அது தொடர்பான திட்டம் தோல்வி கண்டுள்ளது.
நயினாதீவிற்கு தேவையான மின் சாரம் தற்போது தீவில் இயக்கப்படும் மின் பிறப்பாக்கி மூலமே பெறப்படுகின்றது.
இதனால் பிரதான மின் விநியோக மார்க்க மின் இணைப்புக் கேபிளை நயினாதீவிற்குக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது.
இதற்கமைய குறிகட்டுவானில் இருந்து கடல் வழியாக கோபுரங்கள் நாட்டப்பட்டு நயினாதீவிற்கு பிரதான மின் இணைப்பைக் கொண்டு செல்லத் திட்ட முன்மொழிவு வரையப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு அமைய குறிகட்டுவான் இறங்கு துறைக்கும் நயினாதீவு இறங்கு துறைக்கும் இடையில் 5 மின்கோபுரம் அமைப்பதன் மூலமே மின் கேபிள் இணைப்பை கொண்டு செல்ல முடியும் எனவும் இதற்காக 280 மில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்றும் பூர்வாங்கமாகக் கணிக்கப்பட்டது.
இந்தப் பணியை ஆரம்பிப்பதற்கு முன்பு கடலில் மின்கோபுரம் அமைப்பதற்கு ஏதுவான நிலம் உண்டா என சாத்தியவள ஆய்வு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அந்தக் கடல் பிரதேசத்தில் 15 மீற்றர் ஆழத்திற்கு தனி மண் மட்டுமே காணப்படுவதோடு எங்குமே கல்பிரதேசம் காணப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதனால் இத் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தும் சாத்தியம் இல்லை என அறிக்கை யிடப்பட்டுள்ளது.
15 மீற்றர் ஆழத்திற்கு கற்பகுதிகள் இல்லாமல் மண் மட்டுமே இருப்பதனால் ஒரு மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு 200 மில்லியன் (இருபது கோடி) ரூபா செலவு செய்தால் மட்டுமே இத் திட்டத்தை தொடரும் சாத்தியம் காணப்படுவதாக ஆய்வில் ஈடுபட்டவர்கள் இலங்கை மின்சார சபைக்கு அறிக்கையிட்டுள்ளனர்.
இதே நேரம் இப் பகுதியில் மின் கோபுரம் அமைக்கக்கூடிய வகையான நிலத் தன்மை உண்டா, எத்தனை மீற்றர் ஆளத்திற்கு மணல் உண்டு என மேற்கொண்ட ஆய்வுப் பணியின்போது 80 மில்லியன்(எட்டுக் கோடி) ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.