தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் ஒன்றில், மாணவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், பத்தரமுல்லைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்து உபசாரத்தின் போது மாணவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியுள்ளது.
இந்த மோதலின் போது, ஒரு மாணவர் கூர்மையான ஆயுதத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் உடனடியாக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட தலங்கம பொலிஸார், மோதலுடன் தொடர்புடைய அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு இந்தத் துரதிஷ்டவசமான கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளைத் தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.