தேசத்தைப் பாதுகாக்க ஒரு கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈரானியர்களும் உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர் என்று அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரானைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக இந்த கணம் வரை 1.4 கோடிக்கும் அதிகமான பெருமைமிக்க ஈரானியர்கள் பதிவு செய்துள்ளனர். நானும் ஈரானுக்காக உயிர்த் தியாகம் செய்ய எந்தக் காலத்திலும் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது உட்பட 15 அம்ச திட்டங்களை கடந்த மார்ச் 26-ம் தேதி ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்வைத்தார். இந்த 15 அம்ச திட்டங்களை ஏற்று ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரானுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஈரான் நிராகரித்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “ஈரானுக்கான காலக்கெடு அமெரிக்க நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8:00 மணிக்குள் முடிவடைகிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
அதற்குப் பிறகு, அவர்களுக்குப் பாலங்கள் ஏதும் இருக்காது. மின் நிலையங்கள் ஏதும் இருக்காது. கற்காலம் போன்ற நிலைதான் இருக்கும். முழு நாடும் ஒரு இரவில் அழிக்கப்படக்கூடும். அந்த இரவு நாளைய இரவாகவும் இருக்கக்கூடும்” என்று எச்சரித்திருந்தார்.