ஈரானின் அணுசக்தி அமைப்பின் தகவல்படி, தற்போதைய போரின் போது புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி இன்று நான்காவது முறையாகத் தாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் அணுமின் நிலையத்தின் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவில்லை.
முதற்கட்ட விசாரணைகளின்படி, அணுமின் நிலையத்தின் முக்கிய பகுதிகளுக்கு “சேதம் ஏற்படவில்லை” என்றும் அதன் செயல்பாடுகள் “பாதிக்கப்படவில்லை” என்றும் அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், அணுமின் நிலையத்தில் “அதிக அளவிலான கதிரியக்கப் பொருட்கள்” இருப்பதால், ஏதேனும் கடுமையான சேதம் ஏற்பட்டால் அது “பெரிய அணுசக்தி விபத்துக்கு” (Major nuclear accident) வழிவகுக்கும் என்று அறிக்கை எச்சரித்துள்ளது.
புஷெர் அணுமின் நிலையம் ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமாகும்.
ஜெனீவாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தையின் மூன்றாவது சுற்று முடிந்து இரண்டு நாட்களில், அதாவது பிப்ரவரி 28 அன்று இந்த அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.