ஈரானின் பெரிய பாலம் தாக்கப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கப்போவதாக தெரிவித்துள்ள ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் உள்ள 8 முக்கிய பாலங்களை தாக்கி அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இலக்குவைத்துள்ள பாலங்களின் பட்டியலை ஈரான் வெளியிட்டுள்ளதையடுத்து வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் முக்கியமாக குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா பாலம் இடம்பெற்றுள்ளது.
அதைத் தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் ஸாயித் பாலம், அல் மக்தா பாலம், ஷேக் கலீஃபா பாலம், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் கிங் ஃபஹ்த் காஸ்வே பாலம், ஜோர்தானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம், அப்தூன் பாலம் ஆகிய பாலங்களை ஈரான் இலக்குவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை (2) இரவு ஈரானில் உள்ள தெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய நகரங்களை இணைக்கும் 136 மீட்டர் உயரமுடைய மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அழித்தது.
அதற்கு முன்னதாக, போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் போடப்படாவிட்டால் ஈரானை கற்காலத்துக்குத் தள்ளிவிடுமளவு பாரிய குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதற்கடுத்த நாளே ஈரான் பாலம் தாக்கப்பட்டது.
அதன் பின்னர், ட்ரம்ப் தனது ட்ருத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்தது. இது இனி ஒருபோதும் பயன்படுத்தப்படாது. ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இன்னும் பல தாக்குதல்கள் தொடரும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ட்ரம்பின் மிரட்டலுக்கும் ஈரான் பாலம் தாக்கப்பட்டதற்கும் பதிலடி கொடுக்கும் வகையிலேயே மத்திய கிழக்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் 8 பெரிய பாலங்களை அழிக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.