யாழ்ப்பாணம், நாவற்குழி விகாரையில் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளநிலை பிக்குவின் விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்துள்ளது.
சம்பவம்: கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி, நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி ஒருவர் விகாரை வளாகத்தில் உள்ள பில்டர் (Filtered) நீரினைப் பெறுவதற்காகச் சென்றுள்ளார். அந்த வேளையில் விகாரைக்குப் புதிதாக வந்திருந்த இளநிலை பிக்கு அந்தச் சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்துத் தனது தாயாரிடம் தெரிவிக்கவே, தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த இளநிலை பிக்குவைக் கைது செய்து மார்ச் 29ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை நேற்றைய தினம் (ஏப்ரல் 02) வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டிருந்தது.
நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான பிக்கு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்று, பிக்குவின் விளக்கமறியலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.