உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையிலான பாராளுமன்ற தூதுக் குழுவினர், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மார்ச் 22ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை புதுடில்லிக்கு பாராளுமன்ற ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த இலங்கைத் தூதுக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான எதிர்க்கட்சியின் முதற்சோலாசான் கஜயந்த கருணாதிலக, நலீன் பண்டார ஜயமஹ, மஞ்சுள சுரவீர ஆரச்சி, சதுர கலப்பத்தி, ரவீந்திர பண்டார, அசித நிரோஷண எகொட வித்தான, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, (சட்டத்தரணி) கீதா ஹேரத், கே.இளங்குமரன், கிங்ஸ் நெல்சன், தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் உள்ளடக்கியிருந்தனர்.
குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவைச் சேர்ந்த பாராளுமன்ற பணியாளர்களான உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.பி.சந்தன மற்றும் பிரதான உத்தியோகத்தர் எஸ்.டபிள்யூ.ரி.ஆர்.டி. சில்வா மற்றும் பாராளுமன்ற அதிகாரி டபிள்யூ.கே.ஏ.எம்.எம்.எம்.அர்த்தனாயக்க ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.
மார்ச் 22ஆம் திகதி புதுடில்லியைச் சென்றடைந்த தூதுக் குழுவினர் மறுதினம் முதல் உத்தியோகபூர்வ ஆய்வுப் பயணத்தைத் தொடங்கினர்.
மார்ச் 24ஆம் திகதி இலங்கை தூதுக் குழுவினர் “PM Gati Shakti” தேசிய திட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் குறித்த தொடர் அமர்வுகளில் பங்கேற்றனர்.
அத்துடன், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அதிகார சபை, இந்தியாவின் சூரிய வலுசக்தி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டதுடன், இந்திய தொழில் கூட்டமைப்புடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
இரு நாடுகளின் பாராளுமன்ற உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினருடனும் இலங்கைத் தூதுக் குழுவினர் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.