சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் ஆம் திகதி முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர அறிவித்துள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, மேலதிக போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள புகையிரத நிலையங்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையங்களைச் சூழவுள்ள பகுதிகளில் போக்குவரத்து முகாமைத்துவத் திட்டங்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் கடுமையாக அமல்படுத்தப்படும்.
இந்த விசேட வேலைத்திட்டம் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, பண்டிகைக் காலம் முடிவடைந்து பொதுமக்கள் மீண்டும் தமது ஊர்களில் இருந்து நகரங்களுக்குத் திரும்பும் வரை தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.