எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை அவர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு: நிலக்கரி கொள்வனவு தொடர்பான தற்போதைய விசாரணைகள் மற்றும் 2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதிகள் குறித்து ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்ட பின்னணியில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன விசாரணை: நடைபெறவுள்ள விசாரணைகள் எவ்விதத் தாக்கமும் இன்றி சுயாதீனமாக நடப்பதை உறுதி செய்வதற்காகவே தான் பதவியை விட்டு விலகுவதாகவும், விசாரணையின் முடிவுகளை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் கொள்கைக்கு ஆதரவு: அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்குத் தான் ஆதரவளிப்பதாகக் கூறியுள்ள அவர், விசாரணைகளின் மூலம் உண்மை வெளிவரும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நன்றி தெரிவிப்பு: அண்மையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது நாடாளுமன்றத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவும் இன்று (17) தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார். வரவிருக்கும் விசாரணைகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், அவற்றிற்கு எவ்விதத் தடையுமின்றி ஒத்துழைக்கவும் தானும் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மற்றும் செயலாளரின்இராஜினாமா கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.