அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது இராணுவத் தாக்குதலை நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் பல கூட்டணி நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ஆலோசகர் ஒருவர், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் இராணுவத் தளங்கள் அல்லது பெட்ரோ இரசாயனத் தொழிற்சாலைகள் மீண்டும் தாக்கப்பட்டால், ஒன்பது நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் பழமைவாத அரசியல்வாதியான முகமது மொக்பர் தெரிவித்துள்ளார்.
ஈரான் எச்சரிக்கை
அரசாங்கத்திற்கு நெருக்கமான ஈரானின் அரை அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம் வெளியிட்ட அவரது காணொளிப் பதிவில் இந்தக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
எனினும், தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய ஒன்பது நாடுகள் எவை என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இதற்கிடையில், ஈரானின் புரட்சிகர காவல்படையின் பேச்சாளர் ஹொசைன் மொஹேபி கருத்து தெரிவிக்கையில், பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான அமெரிக்க இராணுவத் தளங்கள் தற்போது செயல்படவில்லை என்றும், அமெரிக்கப் படைகள் ஈரானிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தொலைவிற்கு நகர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்கா தனது முழு இராணுவ வலிமையையும் பயன்படுத்திப் போரில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது புதிய மோதலைத் தொடங்குவதன் மூலம் அமெரிக்காவுக்குப் புதிய நன்மைகள் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.