மதுரை:
தவெகவில் கட்சிப் பதவிகளைப் பெற பணம் கேட்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் இரண்டு ஆடியோக்கள் மதுரை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
வைரலாகும் இரண்டு ஆடியோக்கள்:
தவெகவில் மதுரை மத்திய மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட, பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், எம்எல்ஏ முஸ்தபாவின் உதவியாளர் என்று கூறப்படும் ஒருவர் பேசுவதாக ஒரு ஆடியோவும், மதுரை மாவட்ட தவெக நிர்வாகி ஒருவர் பேசுவதாக மற்றொரு ஆடியோவும் வைரலாகி வருகின்றன.
திமுகவின் பொய் பிரச்சாரம்:
முதலமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த முஸ்தபா, மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுகவினர் எங்கள் மீது பொய் பரப்புவதற்காக ஆடியோவைப் பரப்பியுள்ளனர். இது மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியான ஆடியோ. லஞ்சம், லாவண்யம் அற்ற அரசை நடத்தி வருகிறோம். அதில் கனி ராஜா, சபரி ஆகிய இருவரின் குரல்களும் இடம்பெற்றுள்ளன. இருவரையும் அழைத்து விசாரித்துள்ளோம். உண்மையாக ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை யார் செய்தார்கள் என்பது காவல்துறைக்கும் கட்சித் தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
50 ஆண்டுகள் ஆனாலும் வெல்ல முடியாது:
நான் 14 வயதில் இருந்தே சமூகப் பணியில் இருக்கிறேன், இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் இல்லை. சட்டமன்றத்தில் கூட ஆதாரத்துடன் பேசுகிறவன் நான். தேர்தல் காலங்களில் கனி ராஜா, சபரி ஆகியோர் பம்பரமாகச் சுழன்று உழைத்தார்கள். ஆடியோவில் பேசியவர்கள் என் பக்கத்தில்தான் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. மதுரை மத்திய தொகுதியின் 16 வார்டுகளிலும் தவெக நின்றால் வெற்றி பெறும். மதுரை மேயரின் கணவர் ஊழலுக்காகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதைச் சொல்லத் திமுகவினருக்குத் தகுதி உள்ளதா? எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் மதுரையில் திமுக வெற்றி பெறாது. பொய் பிரச்சாரம், விஷமப் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று அவர் தெரிவித்தார்.
#Mustafa #TVK #Madurai #ViralAudio #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive