39 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்றதொரு நாளில் பாராளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசி ஜனநாயகம் அழிக்கப்பட்டதைப் போன்று, இன்று 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் ஜனநாயகத்தை அழிக்க முற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) அன்று நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்தே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குற்றம்சாட்டினார். அவர் மேலும் பேசுகையில்,
“தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச தரப்பினர் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மற்றும் சர்வதேச சட்ட நிறுவனங்கள் இவற்றில் அடங்குகின்றனர்.
இத்தரப்பினரால் எழுப்பப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு பின்வரும் கேள்விகளை நான் சமர்ப்பிக்கிறேன்.
இந்நாட்டின் நீதிமன்ற நீதிபதிகளின் வயதை நீடிப்பதன் மூலம் வழக்கு நடவடிக்கைகளில் விரைவு ஏற்படும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகக் காணப்படுகின்றதா? அல்லது அது தொடர்பில் அரசாங்கத்தின் மதிப்பீடு எத்தகையது?” எனக் கேள்விகளை எழுப்பினார்.